ஓடும் பேருந்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 2 அரசு பேருந்து ஓட்டுநர்கள் - நடத்துனர் கைது

கர்நாடகாவில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 அரசு பேருந்து ஓட்டுநர்கள், கண்டக்டரை உடுப்பி மகளிர் போலீசார் கைது செய்தனர்.
ஓடும் பேருந்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 2 அரசு பேருந்து ஓட்டுநர்கள் - நடத்துனர் கைது
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் இருந்து கடந்த 5-ந் தேதி இரவு ஒரு அரசு பேருந்து ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூருக்கு சென்றது.

அந்த பேருந்தை ஓட்டுநர் ஈரய்யா ஹிரேமட்(வயது 40) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக யுவராஜ் கட்டேகர்(45) என்பவரும், மாற்று ஓட்டுநராக ராகவேந்திரா படகெரா(43) என்பவரும் இருந்தனர். அந்த பேருந்தில் மணிப்பாலை சேர்ந்த 15 வயது மைனர் பெண் உள்பட சில பயணிகள் பயணம் செய்தனர்.

அந்த பேருந்து ராணிபென்னூர் அருகே சென்ற போது, பேருந்தில் பயணம் செய்த மைனர் பெண்ணை தவிர மற்ற பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி சென்றுவிட்டனர். இதனால் மைனர் பெண் மட்டும் பேருந்தில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் ஓட்டுநர்களான ஈரய்யா ஹிரேமட், ராகவேந்திரா படகெரா, நடத்துனர் யுவராஜ் கட்டேகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து, ஓடும் பேருந்தில் அந்த மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அந்த பேருந்து  ராணிபென்னூருக்கு சென்று விட்டது. பேருந்தில் இருந்து இறங்கி மைனர் பெண்ணும் சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அந்த மைனர் பெண் ராணிபென்னூரில் இருந்து மணிப்பாலுக்கு திரும்பி வந்தார்.

அப்போது அவர் தனக்கு பேருந்தில் நேர்ந்த கொடுமையை பற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடுப்பி மகளிர் போலீஸ் நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர் மீது புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநர்கள் ஈரய்யா ஹிரேமட், ராகவேந்திரா படகெரா, நடத்துனர் யுவராஜ் கட்டேகர் ஆகிய 3 பேரையும் உடுப்பி மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com