ஊதிய உயர்வு கோரிக்கைக்கு அரசு ஒத்துவராவிட்டால் போராட்டம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு

ஜனவரி 3-ந்தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு கோரிக்கைக்கு அரசு ஒத்துவராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.
ஊதிய உயர்வு கோரிக்கைக்கு அரசு ஒத்துவராவிட்டால் போராட்டம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு
Published on

சென்னை:

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை கடந்த 27-ந்தேதி (நேற்று முன்தினம்) சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத்துறை செயலாளர், மேலாண்மை இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.

இதில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்குதல், 1.4.2003-க்கு பிறகு பணிக்கு சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை உத்தரவாதம் செய்தல், பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.4 ஆயிரத்து 500 கோடியை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினோம்.

ஆனால் குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.16,800 வழங்கப்படும் என்றும், 1.4.2003-க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்தப்படி ஓய்வூதியம் வழங்குவதற்கான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளதால், தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்துவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். மேலும் அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தியதால் குறைந்தபட்சம் 2.57 என்ற காரணியை (அடிப்படை ஊதியத்தையும் தர ஊதியத்தையும் கூட்டி, வரும் தொகையுடன் 2.57 ஆல் பெருக்கி கிடைக்கும் தொகையை) கணக்கிட்டு ஊதிய உயர்வாக தரவேண்டும் என வலியுறுத்தினோம்.

கோரிக்கைகள் குறித்து மீண்டும் தமிழக முதல்-அமைச்சரோடு பேசி முடிவெடுப்பதாகவும், அடுத்த பேச்சுவார்த்தையை ஜனவரி 3-ந்தேதிக்கு ஒத்திவைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனவே ஜனவரி 3-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் 2.57 என்னும் காரணிக்கு அரசு ஒத்துவரவில்லை என்றால் நம்முடைய போராட்டத்தை கையில் எடுப்போம். நமக்கு உரியதை பெற ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com