மாநகர பஸ் தறிகெட்டு ஓடி 2 பெண்கள் மீது மோதியது - டிரைவருக்கு அடி உதை

தேனாம்பேட்டை அண்ணாசாலையில் மாநகர பஸ் தறிகெட்டு ஓடி 2 பெண்கள் மீது மோதியதில் அவர்கள் காயம் அடைந்தனர். பொதுமக்கள் டிரைவரை அடித்து உதைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகர பஸ் தறிகெட்டு ஓடி 2 பெண்கள் மீது மோதியது - டிரைவருக்கு அடி உதை
Published on

சென்னை:

சென்னை சென்டிரலில் இருந்து திருப்போரூருக்கு நேற்று மாலை மாநகர பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே அண்ணாசாலையில் அந்த பஸ் சென்றபோது திடீரென்று தாறுமாறாக ஓட தொடங்கியது. அந்த பஸ்சை டிரைவர் குருசாமி ஓட்டி சென்றார்.

அவரது கட்டுப்பாட்டை மீறி ஓடிய அந்த பஸ் ஒரு ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோவில் மோதிவிட்டு பிளாட்பாரத்தில் ஏறி நின்றது. இதில் ஸ்கூட்டரில் சென்ற மாலதி என்ற பெண்ணும், ஆட்டோவில் சென்ற அஞ்சலி என்ற பெண்ணும் காயம் அடைந்தனர்.

இதை பார்த்த பொதுமக்கள் திரண்டு வந்து காயம் அடைந்த மாலதி மற்றும் அஞ்சலியை ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பஸ் டிரைவர் குருசாமியை பொதுமக்கள் அடித்து உதைத்து, சாலையில் தரதரவென இழுத்து சென்றனர். இதை பார்த்த அந்த வழியாக வந்த மற்ற மாநகர பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் பஸ்சை சாலையில் நிறுத்திவிட்டு பொது மக்களுடன் மோத தொடங்கினார்கள்.

இதனால் அந்த பகுதி பரபரப்பானது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் போலீஸ் படையுடன் வந்து பஸ் டிரைவர்களையும், பொதுமக்களையும் சமாதானம் செய்தார். டிரைவரை தாக்கியதாக பொதுமக்கள் 2 பேரை போலீசார் பிடித்து சென்றனர்.

இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ்சின் ‘கிளெட்ச்’ திடீரென்று பழுதானதால் விபத்து ஏற்பட்டதாக பஸ் டிரைவர் குருசாமி போலீசாரிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டிரைவரை தாக்கியதாக பொதுமக்கள் 2 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com