கவுண்டம்பாளையம் அருகே ஆடு மேய்க்கும் தகராறில் மூதாட்டி கொலை: வாலிபர் கைது

கவுண்டம்பாளையம் அருகே ஆடு மேய்க்கும் தகராறில் கல்லால் தாக்கி மூதாட்டியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம் அருகே ஆடு மேய்க்கும் தகராறில் மூதாட்டி கொலை: வாலிபர் கைது
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் அம்மன் நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சுப்பம்மாள் (வயது 60).

கடந்த 12-ந்தேதி அப்பகுதியில் சுப்பம்மாள் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார்.

அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மணிகண்டன் (27) வந்தார். அவர், சுப்பம்மாளிடம் இங்கு ஆடுகளை மேய்க்கக் கூடாது என்று தகராறு செய்து வந்தார்.

இதனால் சுப்பம்மாள் சிறிது தூரம் தள்ளி ஆடுகளை கொண்டு சென்று மேய்ச்சலுக்கு விட்டார். அப்போது அங்கு வந்தும் மணிகண்டன் தகராறு செய்தார்.

இதனால் சுப்பம்மாள், மணிகண்டனை தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கீழே கிடந்த கல்லை எடுத்து சுப்பம்மாளை தாக்கினார். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரியநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதற்கிடையே இதுபற்றி பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

இந்த நிலையில் பெரிய நாயக்கன்பாளையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த சுப்பம்மாள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுப்பம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பெரிய நாயக்கன் போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com