

அகமதாபாத்:
குஜராத்தில் 2002-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் கோத்ரா ரெயில் நிலையத்தில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலான நபர்கள், அயோத்தியில் இருந்து திரும்பிய கரசேவகர்கள் ஆவர். இந்த ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த கலவரங்களில் சுமார் 1044 பேர் உயிரிழந்தனர். மேலும் 2500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த கலவரத்தின்போது கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பல அசாம்பாவித சம்பவங்களும் நடைபெற்றன.
இந்த கலவரத்திற்கு மூலகாரணமாக கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கை விசாரித்த குஜராத் ஐகோர்ட் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மீதி 20 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. தண்டனை பெற்றவர்கள் சார்பில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, 11 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. மேலும், 20 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.