

தஞ்சாவூர்:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அடிக்கடி விலை உயர்ந்த சுவாமி சிலைகள் திருட்டு போகிறது. பாதுகாப்பற்ற வகையில் உள்ள கோவில்களின் சிலைகளை பாதுகாக்க அறநிலையத்துறை சார்பில் உரிய பாதுகாப்பு மையம் கட்ட வேண்டும். குமரியில் ஒகி புயலால் விவசாயமும், விவசாயிகளும் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த புயலால் நெல், வாழை, ரப்பர், தென்னை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. எனவே ஒகி புயலால் பாதித்த வாழைக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரமும், நெற்பயிருக்கு ரூ.30 ஆயிரமும், கிராம்புக்கு ரூ.1 லட்சமும், ரப்பருக்கு ரூ.15 ஆயிரமுமாக நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் வறட்சியால் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கருகி பாதிப்படைந்தது. எனவே விவசாயிகளுக்கு அரசு இலவசமாக 2 கோடி தென்னை மரக்கன்றுகள் வழங்கி, வறட்சி நிவாரணமாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும்.
கடந்த மாதம் 30-ந்தேதி வரை வழங்க வேண்டிய 63 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இல்லை எனில் தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுபடியின்றி பாதிக்கப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகி புயலால் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட உட்கட்டமைப்பு நிதி ரூ.25 கோடி மிகவும் குறைவான தொகை ஆகும். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
ஒகி புயலில் சிக்கி காணாமல் போய் இதுவரை மீட்கப்படாக 450 மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நம்பிக்கை தரும் அரசாக செயல்பட வேண்டும்.
தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் வேளையில் தமிழக கவர்னர் ஆய்வு நடத்தி வருவது ஏற்றுக் கொள்ள முடியாது.
வட மாநில கொள்ளையர்களை பிடிக்கும் போது இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது. இதில் போலீஸ் அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் வட மாநிலத்தவர்கள் அதிகம் தங்கி பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழக காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் ரெங்கராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிஎல்.ஏ. சிதம்பரம், நாகராஜன், மாநகர தலைவர் ராஜவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.