காவிரி பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

காவிரி பாசன விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்க அரசு ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கவேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
காவிரி பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்
Published on

நாமக்கல்: 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரள மாநிலத்தில் மழை, வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் முடிந்தவரை உதவி செய்யவேண்டும். தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அரசு உரிய பாதுகாப்பு, நிவாரண ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

மேட்டூர் அணையிலிருந்து இதுவரை 60 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் கடலில் சென்று வீணாக கலந்துள்ளது. தண்ணீர் வீணாக காரணம், நீர்நிலைகளை முறையாக பராமரிக்காததுதான். தண்ணீரை வீணாக்காமல் இருக்கவும், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தும் வகையிலும் உடனடியாக அவசிய நடவடிக்கைகளை எடுத்து, கடைமடை பகுதி வரை விவசாயம் நடைபெற ஏற்பாடு செய்யவேண்டும். இதில் தமிழக அரசு அக்கறையோடு செயல்பட வேண்டும்.

மேலும் காவிரி பாசன விவசாயிகள் உடனடியாக விவசாய பணிகளை மேற்கொள்ள விதை நெல் இலவசமாக வழங்குவதோடு, ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் அரசு வழங்க வேண்டும்.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை அரசு கட்டாயப்படுத்தி திணிக்கக்கூடாது. 8 வழிச்சாலை, சேலம் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றில் அரசு பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு மக்களின் பாதிப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெறவில்லை. இதனால்தான் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளபோதிலும், கடைமடை பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. ஒரேநேரத்தில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல் என்பதை ஆளும்கட்சி மட்டுமே முடிவு செய்துவிட முடியாது. அரசியல் கட்சிகளுக்கு இடையே நாடு தழுவிய அளவில் பல்வேறு கட்ட அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.

கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உள்ளாட்சி பிரதிநிதிகளால்தான் முடியும். இதனால் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர் ஒருவர், தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளாரே, என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஜி.கே.வாசன், “இந்தியாவின் முக்கிய பொறுப்பில் உள்ள பிரதமர், தமிழகத்தில் பயங்கரவாதம் இருக்கின்ற நிலை இருக்கிறது என கருதி பேட்டி கொடுத்துள்ளார் என்றால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு உண்டு. அந்த எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. ஆட்சியாளர்கள் பதில் கூறவில்லை என்றால், மக்களுக்கு சந்தேகம் மேலும், மேலும் வலுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். மத்திய அரசுக்கும் ஒரு மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் பங்கு உண்டு என்பதை நினைவு கூற விரும்புகிறேன்” என்றார்.

முன்னதாக நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி.கே.வாசன் பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் கோஸ்டல் இளங்கோ, மாநில நிர்வாகிகள் தூ.சு.மணியன், சத்தியமூர்த்தி, வக்கீல் செல்வம், மாவட்ட துணை தலைவர் சிவராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அருள் ராஜேஸ், நகர தலைவர் சக்தி வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com