நாகை அருகே காதலனுடன் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை

நாகை அருகே காதலனுடன் தூக்குப்போட்டு 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை அருகே காதலனுடன் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் சமத்துவபுரம் ரோஜா தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது50). விவசாயி. இவருடைய இளைய மகன் ரவிசங்கர் (19). டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்த ரவிசங்கர், திடீரென மாயமானார். அவரை வீரமணி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

நேற்று காலை அப்பகுதியில் வீரமணி மற்றும் உறவினர்கள் ரவிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் ரவிசங்கரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். இதில் ரவிசங்கரின் செல்போன் ‘ரிங்டோன்’ அப்பகுதியில் உள்ள ஒருவருடைய வீட்டுக்குள் இருந்து ஒலித்தது. ஆனால் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த வீரமணி உள்ளிட்டோர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் மின்விசிறியில் ரவிசங்கர், 16 வயது சிறுமி ஒருவருடன் தூக்கில் பிணமாக தொங்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீரமணி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் அங்கு சென்று ரவிசங்கர் மற்றும் சிறுமியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் ரவிசங்கரும், 16 வயது சிறுமியும் ஒன்றாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது பற்றி வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com