பொள்ளாச்சியில் சிறுமி மர்ம மரணம் - உடலை ஒப்படைக்க டாக்டர்கள் மறுப்பு

பொள்ளாச்சியில் 6 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகமடைந்த டாக்டர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மர்ம மரணம்
மர்ம மரணம்
Published on

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டையை சேர்ந்தவர் சின்னராஜ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களது 6 வயது மகள் மோனிஷா. அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம்போல் சிறுமி நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கினார். இன்று அதிகாலை மோனிஷா வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து பெற்றோர் சிறுமியின் உடலை எடுத்துச்செல்ல முயன்றனர். ஆனால் டாக்டர்கள் சிறுமியின் உடலை கொடுக்க மறுத்து விட்டனர்.

குழந்தையின் சாவில் சந்தேகம் உள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறோம். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினர். இதனையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பொள்ளாச்சி டி.எஸ்.பி. சிவக்குமார் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோட்டாட்சியர் ரவிக்குமார் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.

இது குறித்து போலீசார் கூறும்போது, டாக்டர்கள் சிறுமியின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறியதின்பேரில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் தான் சிறுமி மோனிஷா எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com