காரைக்கால் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு- தலைமறைவாக இருந்தவர் கைது

காரைக்கால் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 24 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

காரைக்கால்:

காரைக்கால் திருநள்ளாறு சுறைக்குடி கந்தவழி தோப்பை சேர்ந்தவர் சுதாகர். இவர் அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர். அதன்பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் குற்றவாளியான சுதாகருக்கு தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அறிந்ததும் சுதாகர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகி விட்டார். அவர் பல்வேறு மாநிலங்களில் பதுங்கியிருந்து வந்தார்.

கடந்த 24 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்தார். தலைமறைவாகி விட்ட சுதாகரை பிடித்து கோர்ட்டில் ஆஜர் படுத்தும்படி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து சீனியர் போலீஸ்சூப்பிரண்டு மகேஸ்குமார் பன்வால், போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் ஆகியோரின் உத்தரவின்பேரில் திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரவின்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தலைமறைவாகி விட்ட சுதாகர் கேரளாவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதன்பேரில் தனிப் படை போலீசார் கேரளா விரைந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த சுதாகரை மடக்கிபிடித்து கைது செய்தனர்.

நேற்று இரவு கைது செய்யப்பட்ட சுதாகரை காரைக்கால் அழைத்து வந்தனர். இன்று அவரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com