கோவை அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமி பலாத்காரம்- போக்சோவில் புதுமாப்பிள்ளை கைது

கோவை அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புதுமாப்பிள்ளை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிவலிங்கம்
சிவலிங்கம்
Published on

துடியலூர்:

கோவை அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புதுமாப்பிள்ளை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவையை அடுத்த காரமடை அருகே உள்ள தேரம்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் சிவலிங்கம் (வயது 26). இவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சிவலிங்கம், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். இதனைகேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில், தேரம்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சிவலிங்கம் தன்னிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து சிவலிங்கத்திடம் சிறுமியின் பெற்றோர் முறையிட்டனர். அப்போது அவர் சிறுமியை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து இந்த பிரச்சினை பேசி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுமிக்கும், வாலிபருக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது.

இதற்கிடையில், சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இந்த சம்பவம் குறித்து சைல்டு லைன் அமைப்பிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரின் பேரில், கோவை உக்கடம் டான்போஸ்கோ காப்பக நிர்வாகி ஏஞ்சலின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, புதுமாப்பிள்ளை சிவலிங்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவரை நாளை திருமணம் செய்ய இருந்த நிலையில், புதுமாப்பிள்ளை போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com