திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை கொன்று காதலன் தற்கொலை

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியை கொன்று விட்டு காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை கொன்று காதலன் தற்கொலை
Published on

கரூர்:

திருவாரூர் மாவட்டம் பழையபாளைம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் வினோத் (வயது 27). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் தீயணைப்பு கருவிகள் சப்ளை செய்யும் ஏஜெண்ட் எடுத்து தொழில் செய்து வந்தார்.

இவர் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் போது, முதலாமாண்டு மாணவியான கரூர் குட்டகடை பாரதியார் நகரை சேர்ந்த துரைராஜ்-கவுரிசங்கரி தம்பதியின் மகள் சண்முகபிரியா (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. கல்லூரி படிப்பு முடிந்த பிறகும் இருவரும் அடிக்கடி சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கரூரில் உள்ள சண்முகப்பிரியா வீட்டிற்கு வினோத் சென்றார். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் மாலை வரை வெளியே வரவில்லை. இதனிடையே ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சண்முகபிரியாவின் தாய் கவுரிசங்கரி வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டிற்குள் சண்முகப்பிரியா நைட்டி அணிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே வினோத் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த கவுரிசங்கரி தனது மகளின் உடலை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் சென்று பார்வையிட்டனர். பின்னர் கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், பிரித்விராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சண்முகபிரியாவின் கழுத்தில் துணியால் நெரித்தது போன்ற காயம் இருந்தது. இதனால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, வினோத் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

சண்முகபிரியாவுக்கு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அவர் பணியில் சேர இருந்தார். இதையறிந்த வினோத் நேற்று மதியம் சண்முகபிரியா வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த சண்முகபிரியாவிடம், வேலைக்கு எல்லாம் செல்ல வேண்டாம். நாம் இப்போதே திருமணம் செய்து கொள்வோம் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் சண்முகபிரியா இன்னும் 2, 3 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்வோம். அது வரை நான் வேலை பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு வினோத் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வினோத், சண்முகப்பிரியாவை கழுத்தை நெரித்து கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியை கொன்று விட்டு காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com