உன்னாவ் சிறுமியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றலாம் - சுப்ரீம் கோர்ட்டு

குடும்பத்தினர் விரும்பினால் உன்னாவ் சிறுமியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றலாம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் மீது கற்பழிப்பு புகார் செய்தார்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சிறுமி, தனது வக்கீல், உறவினர்களுடன் காரில் சென்ற போது லாரி மோதியது. இதில் உறவுக்கார பெண்கள் 2 பேர் பலியானார்கள்.

சிறுமியும், வக்கீலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுமியை கொல்ல நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது உன்னாவ் சிறுமி கற்பழிப்பு, விபத்து, மற்றும் அதன் தொடர்புடைய வழக்கு என மொத்தம் 5 வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிட்டது.

மேலும் சிறுமிக்கு உத்தரபிரதேச மாநில அரசு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விபத்து தொடர்பான விசாரணையை 7 நாட்களில் சி.பி.ஐ. முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

உன்னாவ் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சிறுமி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணத்தை உத்தரபிரதேச அரசு வழங்கியது.

இந்த நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமியின் புகைப்படம், பெயர், மற்றும் எந்த அடையாளத்தையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளியிட கூடாது என்று உத்தரவிட்டனர்.

சிறுமியின் மாமா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ரேபரேலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க சென்ற போது சிறுமி கார் மீது லாரி மோதியது. இதையடுத்து சிறுமியின் மாமாவை ரேபரேலி சிறையில் இருந்து டெல்லி சிறைக்கு மாற்ற உத்தவிட்டனர்.

சிறுமியை லக்னோ ஆஸ்பத்திரியில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு மாற்ற தயாராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததாக சி.பி.ஐ அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவித்து இருந்தனர்.

இதுதொடர்பாக நீதிபதிகள் கூறும்போது, ‘‘சிறுமியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றும் முடிவை எடுக்க அவரது குடும்பத்தினருக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதுபற்றி அவர்கள் முடிவு செய்யலாம்’’ என்றனர்.

அப்போது சிறுமி குடும்பத்தினர் தரப்பில் கூறும் போது, லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதும் சிகிச்சை திருப்தி அளிப்பதாகவும், தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றி கொள்கிறேன் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு விசாரணயை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com