சேர்க்காடு பள்ளி வளாகத்தில் பிறந்து சில மணி நேரமேயான பெண் குழந்தை மீட்பு

சேர்க்காடு பள்ளி வளாகத்தில் பிறந்து சில மணி நேரமேயான பெண் குழந்தை மீட்கப்பட்டது. அதனை வீசி சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை.
முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை.
Published on

திருவலம்:

வேலூர் மாவட்டம் திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் பின்புறம் உள்ள சுற்றுச்சுவர் ஓரம் முட்புதரில் இருந்து நேற்று காலை குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டது.

அதனை கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது, முட்களால் குத்திய நிலையிலும், எறும்பு கடித்து கொண்டிருந்த நிலையிலும் பிறந்து சில மணி நேரமேயான பெண் குழந்தை உடலில் துணி எதுவும் சுற்றாமல் நிர்வாண நிலையில் அழுது கொண்டிருந்தது.

உடனடியாக அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டு, சேர்க்காடு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சேர்க்காடு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மலர்விழி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து, சிகிச்சை அளித்தார். பின்னர் திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் டாக்டர் மலர்விழி ஆகியோர் குழந்தையை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஈவு இரக்கமின்றி பிறந்து சில மணி நேரமேயான பெண் குழந்தையை அனாதையாக வீசி சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com