கோவையில் 2½ வயது பெண் குழந்தை கடத்தி கொலை - கிணற்றில் உடல் மீட்பு

கோவையில் பெற்றோருடன் தூங்கிய 2½ வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தை அம்ருதா
குழந்தை அம்ருதா
Published on

கோவை:

கோவை அன்னூர் அருகே உள்ள கரிய கவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி காஞ்சனா. இவர் விளாங்குறிச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார். இவர்களுக்கு அம்ருதா(2½) என்ற பெண் குழந்தை உள்ளது.

நேற்று இரவு கனகராஜ் வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர். இரவு அனைவரும் சாப்பிட்டனர். பின்னர் கனகராஜ் தனது மனைவி மற்றும் மகளுடன் அறைக்கு தூங்க சென்றார். உறவினர்கள் வீட்டுக்குள்ளும், வெளியேயும் படுத்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் காஞ்சனா கழிவறைக்கு சென்று விட்டு குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தூங்க வைத்தார். பின்னர் அதிகாலை 3.45 மணியளவில் காஞ்சனா எழுந்து பார்த்தார். அப்போது அருகில் படுத்து இருந்த குழந்தையை காணவில்லை.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீடு முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் குழந்தையை காணவில்லை. எனவே அவர் சத்தம் போட்டு கதறி அழுதார். இதையடுத்து வீட்டில் தூங்கிகொண்டு இருந்த கனகராஜ் மற்றும் உறவினர்கள் எழுந்தனர். பின்னர் காஞ்சனா அவர்களிடம் குழந்தை காணவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் குழந்தையை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து குழந்தையின் போட்டோவுடன் சமூக வலைதளத்தில் தகவல் பரப்பினர்.

இந்த நிலையில் கனகராஜின் வீட்டின் அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள பாழடைந்த ஒரு கிணற்றில் இன்று காலை 7.30 மணியளவில் குழந்தை அம்ருதா மிதப்பதை உறவினர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கிணற்றில் இறங்கி குழந்தையை மீட்டனர்.

பின்னர் குழந்தையை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை அம்ருதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் பீளமேடு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குழந்தை அம்ருதாவை கடத்தி கொலை செய்து கிணற்றில் உடலை வீசி சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com