

செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்து கிருஷ்ணன் (வயது 47), ஏழுமலை (42). விவசாயிகள். அண்ணன், தம்பிகளான இவர்களிடையே நிலத்தகராறு உள்ளது.
இதுதொடர்பாக 2 பேரும் அடிக்கடி மோதி உள்ளனர். தற்போது ஏழுமலை வயலில் நெல் அறுவடை முடிந்துள்ளது. எனவே வைக்கோல்களை தனது நிலத்தில் வைத்திருந்தார். இந்த வைக்கோல்களை நேற்று ஏழுமலை வேனில் ஏற்றிக்கொண்டிருந்தார். இவருக்கு உதவியாக மைத்துனர் முருகன்(40) இருந்தார். இதனையறிந்த முத்து கிருஷ்ணன் அங்கு வந்தார். நிலத்தகராறு இருக்கும்போது எப்படி இந்த இடத்தில் இருந்து வைக்கோல் ஏற்றலாம் என்று ஏழுமலையிடம் முத்துகிருஷ்ணன் தட்டிக்கேட்டார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையறிந்த முருகன் தகராறை விலக்க சென்றார். ஆத்திரமடைந்த முத்துகிருஷ்ணன் தனது தம்பி என்று கூட பாராமல் ஏழுமலையை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனை தடுக்க வந்த முருகனுக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இதனை பார்த்த முத்து கிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவத்தை அறிந்த கிராமமக்கள் ஒன்று திரண்டு வந்தனர். உயிருக்கு போராடிய ஏழுமலை, முருகன் ஆகியோரை தூக்கிகொண்டு செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துகிருஷ்ணனை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.