ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் மரணம்

உவரி கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திசையன்விளை:

திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயமுருகன். இவருடைய மகன் முத்துலிங்கம் (வயது 19). கல்லூரி மாணவரான இவர் நேற்று குடும்பத்துடன் உறவினர் ஒருவரின் முடி காணிக்கை செலுத்துவதற்கு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு வந்தார். முடிகாணிக்கை செலுத்தி விட்டு கடலில் முத்துலிங்கம் தனது உறவினருடன் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் முத்துலிங்கம் சிக்கினார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த உவரி கடலோர காவல்துறையினர் படகு மூலம் கடலுக்கு சென்றனர். முத்துலிங்கத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து உவரி கடலோர காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com