

ஜனாதிபதி தேர்தலில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவதற்காக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் பா.ஜனதாவின் மூவர் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் நேற்று திடீரென பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோர் பீகார் கவர்னராக பதவி வகிக்கும் ராம்நாத் கோவிந்த்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தனர்.
இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதாவின் முடிவு தன்னிச்சையானது. இது தொடர்பாக காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் இதுகுறித்து அனைத்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி ஒருமித்த முடிவு எடுக்கவேண்டும் என்றே காங்கிரஸ் விரும்புகிறது.
தனது வேட்பாளரை அறிவிக்கும் முன்பாக பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக பா.ஜனதா எதிர்க்கட்சிகளிடம் நம்பிக்கையை உருவாக்கி இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. ஆளும் கட்சி இப்படி நடந்து கொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே பா.ஜனதாவின் வேட்பாளரை எதிர்க்கட்சிகள் ஒருமனதாக ஆதரிக்க வாய்ப்பு இல்லை.
இதுபற்றி வருகிற 22-ந் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளும் கூடி முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமாஜ்வாடி தலைவர் நரேஷ் அகர்வால் கூறும்போது, ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரை நிறுத்துவதா, வேண்டாமா என்பது பற்றி அனைத்து எதிர்க்கட்சிகளும் 22-ந் தேதி அன்று முடிவு செய்யும் என்றார்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், “தலித் வேட்பாளருக்கு எதிரான எந்த நிலைப்பாட்டையும் எங்கள் கட்சி எடுக்காது. எனினும் அரசியல் சார்பில்லாத ஒரு தலித் வேட்பாளரை பா.ஜனதா அறிவித்து இருக்கலாம். அதே நேரம் எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவின் வேட்பாளரை விட சிறந்த தலித் வேட்பாளரை நிறுத்தினால் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரையே எங்கள் கட்சி ஆதரிக்கும்” என்றார்.
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பா.ஜனதா தனது வேட்பாளரை அறிவித்ததற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
“ஜனாதிபதி வேட்பாளர் பெயருடன் மீண்டும் சந்திப்பதாக கூறியவர்கள் தற்போது தங்கள் விருப்பத்தின்படி வேட்பாளரை அறிவித்து இருக்கின்றனர். இதில் எங்கே ஒருமித்த கருத்துக்கான முயற்சி இருக்கிறது? இடதுசாரிகளை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டி இருக்கவேண்டும் என்பதையே விரும்புகிறோம்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், பா.ஜனதாவின் மூவர் குழு ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது எந்த பெயரையும் பரிந்துரைக்கவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்டவரை அவர்கள் அறிவித்து இருக்கின்றனர். இதை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.
இதே கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி கூறும்போது, ராம்நாத் கோவிந்த் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர். எனவே அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தாபானர்ஜி, கருத்து தெரிவிக்கையில், “பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி பதவிக்கு ஏற்றவர் அல்ல என்று கூறமாட்டேன். அதே நேரம், நாட்டில் இவரைவிட எத்தனையோ பெரிய தலித் தலைவர்கள் எல்லாம் இருக்கின்றனர். ஜனாதிபதி பதவி என்பது மிகவும் உயர்ந்தது. அதற்கு பிரணாப் முகர்ஜி அளவிற்கு மதிப்பு கொண்ட ஒருவரையோ, சுஷ்மா சுவராஜையோ அல்லது எல்.கே.அத்வானியையோ கூட அறிவித்து இருக்கலாம்” என்றார்.
லாலுபிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் இப்பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தன.
அதே நேரம், பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முதல்-மந்திரி நிதிஷ்குமார், பா.ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிப்பதாக நிருபர்களிடம் கூறினார்.
இது தொடர்பாக கூட்டணி கட்சிகளின் தலைவர்களான சோனியா காந்தி, லாலுபிரசாத்திடம் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சியும், பா.ஜனதாவின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் பெயர் அறிவிக்கப்பட்ட உடன் பிரதமர் மோடி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் ஆகியோருடன் தொடர்புகொண்டு தங்களது வேட்பாளருக்கு ஆதரவு கேட்டார். அதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.
சந்திரபாபு நாயுடு பிரதமரிடம் கூறுகையில், ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். அவரை வேட்பாளராக நீங்கள் அறிவித்ததை வரவேற்கிறேன் என்றார்.
இதேபோல் பிரதமரிடம் சந்திரசேகர ராவும் ஆதரவு தெரிவித்தார். நாங்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டது போல் தலித் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியதற்கு நன்றி என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, பா.ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தனது கருத்தை தெரிவிக்க கட்சியின் கூட்டத்தை விரைவில் கூட்டுகிறது.
இதுபற்றி அக்கட்சியின் எம்.பி. ராவுத் கூறியதாவது:-
பா.ஜனதாவின் ஆட்சி மன்ற குழுவில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த்தை நிறுத்த முடிவு செய்த உடன் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, எங்களது தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் தொடர்பு கொண்டு தங்களது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக ஓரிரு நாட்களில் கட்சியின் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதன்பிறகு எங்களது பதிலை தெரிவிப்பதாக அமித்ஷாவிடம் உத்தவ் தாக்கரே கூறினார்.
நாங்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை நிறுத்தும்படி கூறினோம். இதில் பிரச்சினை இருப்பதாக கருதினால் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை நிறுத்தலாம் என்று கேட்டுக்கொண்டு இருந்தோம். ஆனால் வேறொருவரின் பெயரை அவர்கள் அறிவித்து இருக்கின்றனர். இருந்தாலும் எங்களது கட்சியின் முடிவை விரைவில் தெரிவிப்போம்.