அரசு பஸ்களை சீரமைக்க தமிழ்நாட்டுக்கு ரூ.1,600 கோடி ஒதுக்கப்படும் - ஜெர்மனி பிரதமர் அறிவிப்பு
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று காலை இந்தியா வந்தார். அவருக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் இந்தியா- ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான 5-வது உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இன்று காலை டெல்லியில் நடந்த தொழில் முனைவோர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜெர்மனி - இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பசுமை நகர்ப்புற இயக்கத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல் தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். டெல்லியில் காற்று மாசுவை நாம் பார்த்து வருகிறோம். அதற்கு தீர்வாக டீசல் பஸ்களுக்கு பதில் மின்சார பஸ்களை பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் ஏஞ்சலா மெர்கல் அரியானா மாநிலம் குர்கான் அருகே மானேசர் பகுதியில் உள்ள ஜெர்மனி நாட்டு தொழிற்சாலைக்கு சென்று பார்வையிடுகிறார்.
அங்கிருந்து அவர் டெல்லியில் உள்ள துவாரசா செக்டார் 21 மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். ரெயில் நிலையத்தின் மாடியில் ஜெர்மனி நாட்டு அரசு நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஒளி மின்னழுத்த தகடுகளை பார்வையிடுகிறார். ஜெர்மனியுடனான கூட்டு முயற்சியில் ஒளி மின்னழுத்த தகடுகள் அமைக்கப்பட்டதால் ஏஞ்சலா மெர்க்கல்லின் சுற்றுப்பயணத்தில் துவாரகா மெட்ரோ ரெயில் நிலையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டது. அதன்பின் அவர் டெல்லி விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கிருந்து ஜெர்மனிக்கு திரும்புகிறார்.
இதுகுறித்து ஜெர்மனி நாட்டுக்கான இந்திய தூதர் கிறிஸ்டியன் விக்லேர் கூறும்போது, ஜெர்மனி நாடு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு செயல்படுவதில் உறுதியாக இருக்கிறது. அதன்படி ஜெர்மனி நாட்டு அரசு முக்கிய மெட்ரோ நிலையங்களில் ஒளி மின்னழுத்த திட்டங்களை செயல்படுத்த நிதியுதவி அளித்து வருகிறது. மேலும் இ-ரிக்ஷா திட்டம் குறித்து பிரதமர் ஏஞ்சலா மெர்கல்லுக்கு செயல் விளக்கம் செய்து காட்ட ஏற்பாடு செய்துள்ளோம்.

