காங்கிரசார் ஆர்ப்பாட்டம் - தூத்துக்குடியில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெல்லையில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரசார் ஆர்ப்பாட்டம் - தூத்துக்குடியில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கைது
Published on

நெல்லை:

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டும் மத்திய அரசு அமைக்கவில்லை. இதையடுத்து தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள், விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை மாநகர் மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், எஸ்.சி., எஸ்.டி.யினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யாத பா.ஜ.க. அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி.ராமசுப்பு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். பின்னர் அவர்கள் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதே போல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் புதிய தமிழகம் சார்பில் ரெயில் மறியலுக்கு முயன்றனர். இதையடுத்து மறியலுக்கு முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இன்று தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு கீதாஜீவன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். இதை தொடர்ந்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கீதாஜீவன் எம்.எல்.ஏ உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com