கியாஸ் கசிந்து வீட்டில் தீப்பிடித்தது - தொழில் அதிபர் கருகி பலி

புழல் அருகே கியாஸ் சிலிண்டர் கசிந்து வீட்டில் தீப்பிடித்ததில் தொழிலர் அதிபர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

செங்குன்றம்:

புழல் அடுத்த புத்தகரம், மகாதேவி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முத்து சுப்பிரமணி (60). தொழில் அதிபர். இவர் சென்னை அண்ணா நகரில் ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார்.

இவருடய மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். ஒரே மகன் மித்ரா லண்டனில் படித்து வருகிறார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மித்ரா சென்னை வந்தார். நேற்று இரவு அவர் நண்பர்களை சந்திக்க வெளியில் சென்றார். வீட்டில் முத்துசுப்பிரமணி மட்டும் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மித்ரா வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதையும், தீப்பற்றி எரிவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்குன்றம், மாதவரம் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

அப்போது வீட்டில் உள்ள அறையில் முத்துசுப்பிரமணி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் கியாஸ் கசிந்து தீப்பிடித்ததில் முத்துசுப்பிரமணி உடல் கருகி இறந்து இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com