

திருவள்ளூர்:
ஆந்திரா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக பெரிய பைகளுடன் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். பைகளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் உசிலம்பட்டியை சேர்ந்த குருநாதன், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த லோவாஜி என்பது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து மொத்தம் 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 7 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.