மார்க்கெட்டுகள், சுற்றுலா தலங்களை குறிவைத்து ரூ.5 கோடி கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல்

மார்க்கெட்டுகள், சுற்றுலா தலங்களை குறிவைத்து இதுவரை ரூ.5 கோடி வரை கள்ளநோட்டுகளை கோவையில் கைதான கும்பல் அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். #fakecurrency
கிதர் முகமது
கிதர் முகமது
Published on

கோவை சாய்பாபா காலனியில் கள்ளநோட்டுகள் அச்சடித்த ஆனந்த்(வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கும்பல் தலைவனான காரமடையை சேர்ந்த சுந்தர் (38), கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்த கிதர் முகமது (55) ஆகியோரை தேடி வருகின்றனர்.

இவர்கள் கடந்த 2 மாதங்களாக சாய்பாபா காலனி அருகே வேலாண்டிபாளையத்தில் அறை எடுத்து தங்கி கள்ளநோட்டுகள் அச்சடித்து வந்துள்ளனர். இதுவரை ரூ.5 கோடி வரை கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட், கோவை மேட்டுப்பாளையம் மார்க்கெட், ஈரோடு ஜவுளி மார்க்கெட் உள்ளிட்ட தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டுகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

இந்த மார்க்கெட்டுகளுக்கு தமிழகம் மட்டுல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்வார்கள். இங்கு வழக்கமாக லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனையும் நடைபெறும் என்பதால் கள்ள நோட்டுகளை எளிதாக புழக்கத்தில் விட்டுள்ளனர்.

கமி‌ஷன் அடிப்படையில் ஊழியர்களை நியமத்து கள்ளநோட்டுகளை மாற்றி உள்ளனர். அந்த ஊழியர்கள் யார்-யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிதர் முகமது ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டி, போத்தனூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கோவை மற்றும் ஈரோட்டில் பலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் மூலம் தற்போது கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருக்கலாம் என கருதுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

தலைமறைவான சுந்தர், கிதர் முகமது ஆகியோர் பிடிபட்டால் தான் இந்த கும்பலின் பின்னணி பற்றி முழு தகவல்களும் தெரியவரும். இவர்களை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் கேரளா, ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

இருவரின் செல்போனும் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கடைசியாக யார்-யாரிடம்? பேசினார்கள் என பட்டியல் சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கிதர் முகமது ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கியவர். தற்போது இந்த கும்பல் கோடிக்கணக்கில் கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர். அதிலும், யாரும் எளிதில் கண்டுபிடித்து விடாதபடி, குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன வெள்ளை காகிதங்களை பயன்படுத்தி கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளனர்.

குஜராத்தில் இருந்து இந்த கும்பலுக்கு நவீன காகிதங்களை சப்ளை செய்தது யார்? என்பது மர்மமாக உள்ளது. இதன்பின்னணயில் மிகப் பெரிய கும்பல் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் கள்ள நோட்டு வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு மாற்றப்படும் என தெரிகிறது. #fakecurrency

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com