எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில் பாஜகவுக்கு எதிர்பார்த்ததைவிட ஆதரவு பெருகி வருகிறது - இல.கணேசன்

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில் பா.ஜனதாவுக்கு எதிர்பார்த்ததைவிட ஆதரவு பெருகி வருகிறது என்று இல.கணேசன் கூறியுள்ளார். #Ganesan #BJP #ilaganesan
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில் பாஜகவுக்கு எதிர்பார்த்ததைவிட ஆதரவு பெருகி வருகிறது - இல.கணேசன்
Published on

சென்னை:

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழக தேர்தல் களத்தில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

பதில்:- எதிர்பார்த்ததை விட அதிகமான அளவில் ஆதரவு பெருகி வருகிறது.

கேள்வி:- எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் போது ஆதரவு பெருகி வருவதாக எப்படி சொல்கிறீர்கள்?

பதில்:- உண்மைதான். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத்தான் இப்போது பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மோடி ஆட்சியின் சாதனைகளை சொன்னால் போதும். அதுவே பா.ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும்.

கேள்வி:- நீங்கள் சாதனை என்பதையெல்லாம் வேதனையாக அல்லவா எதிர்க்கட்சிகள் கூறுகின்றன?

பதில்:- எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரும் போது சிறிது காலம் சிரமம் ஏற்படத்தான் செய்யும். அது மக்களுக்கும் தெரியும்.

இந்த தலைமுறைக்கு தெரிந்து இராத ஒரு வி‌ஷயம். அணாவில் இருந்து நயா பைசாவாக மாறியபோதும் நீண்ட நாட்கள் பிரச்சினை இருந்தது. அதன் பிறகு அணா, பைசா நினைவு இல்லை.

தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டபோது ‘டைவர்சன்’ என்று மாற்றி மாற்றி விட்டு சிரமம் ஏற்பட்டது. அலைய விடுகிறார்களே என்றுதான் தோன்றியது. சாலை அமைந்த பிறகு அந்த சிரமத்தை மறந்து விடுவோம். ஒரு நன்மைக்காக சிறு கஷ்டங்கள் ஏற்படத்தான் செய்யும். அதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். எதிர்க்கட்சிகளுக்குத்தான் அதை பொறுக்க முடிய வில்லை.

மோடி 5 ஆண்டுகள்தான் பிரதமராக இருந்துள்ளார். இந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தார்? 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்ன செய்தது? அப்போது ஏற்படாத மாற்றம் இப்போது ஏற்பட்டு இருக்கிறதா? இல்லையா? இதெல்லாம் மக்களுக்கு தெரியும். ஆனால் எதிர்க்கட்சிகள் வாக்குக்காக அவர்களை திசை திருப்ப பார்க்கிறார்கள்.

கேள்வி:- சிரமங்களை தாங்கி மக்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்களா?

பதில்:- நிச்சயமாக. மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. ஆனால் பாதிப்பு இல்லை. எனவே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவரது நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள்.

கேள்வி:- மி‌ஷன் சக்தி அறிவிப்பு மூலம் ராணுவ ரகசியத்தை மோடி வெளியே தெரிவித்து விட்டதாக ப.சிதம்பரம் குறை கூறி உள்ளாரே?

பதில்:- மிகப்பெருமையான ஒரு நிகழ்வை பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். மி‌ஷன் சக்தியின் மூலம் உலகின் 4-வது நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. இதை தேச பக்தர்கள் அனைவரும் வர வேற்பார்கள்.

கேள்வி:- அப்படியானால் ப.சிதம்பரம் தேச பக்தி இல்லாதவரா?

பதில்:- அதுபற்றி எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார். #Ganesan #BJP #ilaganesan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com