கஜா புயல் பாதிப்பு: குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டம்

மன்னார்குடி அருகே கஜா புயல் பாதிப்பால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கஜா புயல் பாதிப்பு: குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டம்
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 16-ந்தேதி வீசிய கஜா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

புயலால் இந்த கிராமத்தில் மின்சாரம் இல்லாததால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் புயல் வீசி 20 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த அதிகாரிகளும் துளசேந்திர புரம் பகுதிக்கு வரவில்லை. மேலும் இந்த பகுதிக்கு முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்னார்குடி - பட்டுக் கோட்டை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது இந்த பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com