

கோவை:
கோவை மாவட்டம் சோமனூரில் உள்ள பேருந்து நிலையத்தில், கடந்த 7-ம் தேதி மதியம் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஏராளமான பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு பேருந்து புறப்படத் தயாரானபோது, எதிர்பாராதவிதமாக பேருந்துகள் நிறுத்தும் இடத்தின் மேல் உள்ள காங்கிரீட் கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது.
ஒரு பகுதி பேருந்தின் மீதும் மற்ற பகுதி தரையிலும் விழுந்து சிதறியது. இதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். விரிசல் விட்டிருந்த மேற்கூரை பராமரிக்கப்படாமல் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், சோனூர் பஸ் நிலைய விபத்து குறித்து விசாரிப்பதற்கு விசாரணை அதிகாரியாக ககன்தீப்சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
07.09.2017 அன்று, கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், சோமனூர் பேரூராட்சியிலுள்ள பேருந்து நிலைய மேற்கூரையின் பகுதி கான்கிரிட் சுவர் இடிந்து, அதன் கீழ் நின்று கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மற்றும் 12 பேர் காயமடைந்ததற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து தக்க விசாரணை மேற்கொள்ளும் பொருட்டும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கும் பொருட்டும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ககன்தீப் சிங் பேடி அவர்களை ஒரு நபர் விசாரணைக் குழுவாக அரசு நியமித்துள்ளது.
மேற்கண்ட விசாரணைக் குழு தனது விசாரணை அறிக்கையை இரண்டு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.