கோவையில் கல்லூரி மாணவர் பீர் பாட்டிலால் குத்திக்கொலை- நண்பர் வெறிச்செயல்

கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்த நண்பரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் கல்லூரி மாணவர் பீர் பாட்டிலால் குத்திக்கொலை- நண்பர் வெறிச்செயல்
Published on

கோவை:

கோவை போத்தனூர் கணேசபுரம் விட்டல் நகரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் விஷ்ணு (வயது 20). இவர் வாளையாரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று இரவு அதே பகுதியில் ஒரு சந்தில் நண்பர்களுடன் மது குடித்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர் ஒருவர் பீர் பாட்டிலை உடைத்து விஷ்ணுவின் கழுத்தில் குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த விஷ்ணுவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அதிர்ச்சியடைந்த மற்ற நண்பர்கள் விஷ்ணுவை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆஸ்பத்திரியில் விபத்து என்று கூறி இரவு 1 மணிக்கு சேர்த்து விட்டு மாயமானார்கள். ஆஸ்பத்திரியில் விஷ்ணுவின் கழுத்தில் ஏற்பட்ட காயத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை விஷ்ணு பரிதாபமாக இறந்தார்.

விஷ்ணுவின் கழுத்தில் ஏற்பட்ட காயம் குறித்து டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து அவர்கள் போத்தனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விஷ்ணுவின் நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாய்த்தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் பீர் பாட்டிலால் விஷ்ணுவின் கழுத்தில் குத்தியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com