

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசலப் பிரதேசம் மற்றும் மேகாலயாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடும் மழையால் அசாம் மாநிலத்தில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் லகிம்பூர், தெற்கு சல்மாரா, கோல்பாரா, ஹோஜாய், கர்பி அங்காங் உட்பட 5 மாவட்டங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. அந்த மாவட்டங்களை சேர்ந்த 78 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகள் கூறுகையில், ‘‘வெள்ளத்தில் சிக்கிய 78 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
18 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அம்மாநிலத்தில் ஓடும் தன்சிரி ஆற்றில் அளவுக்கு மீறி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. வெள்ளத்தில் 86 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ளத்தில் 306 ஹெக்டேர் பரப்பிலான விளைநிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளன’’ என தெரிவித்தனர்.