ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியானான். அவனை காப்பாற்ற முயன்று தத்தளித்த மற்றொரு சிறுவனை பொதுமக்கள் மீட்டனர்.
பலி
பலி
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி ஊராட்சி, டி.வீரப்பள்ளி அருகே உள்ள பூசணிக்காய் வட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் கனிஷ் (வயது 4). அதே பகுதியை சேர்ந்த நீதி என்பவரின் மகன் சுமன் (11). இவர்கள் இருவரும் நேற்று மதியம் சுரேஷ் என்பவரின் நிலத்தில் கிணற்றின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். திடீரென கனிஷ் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தான்.

உடனே சுமன், கனிஷை காப்பாற்ற கிணற்றில் குதித்தான். ஆனால் அவனுக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சலிட்டுள்ளான். இதை கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். அதற்குள் கனிஷ் தண்ணீரில் மூழ்கிவிட்டான். தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த சுமனை பொதுமக்கள் மீட்டனர்.

பின்பு கனிஷை மீட்பதற்காக கிணற்றுக்குள் குதித்து தேடினர். 40 அடி தண்ணீர் இருந்ததால் சிறுவனை மீட்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து ஜோலார்பேட்டை போலீசாருக்கும், நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் நிலைய அலுவலர் முத்தையா தலைமையில் சென்று சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்டநேரம் போராடியும் சிறுவனை மீட்க முடியாததால் கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். பின்னர் 3 மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் கனிஷை பிணமாக மீட்டனர். கனிஷ் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com