பள்ளி விடுதியில் தங்கி படித்த 4 மாணவர்கள் மாயம் - போலீசார் விசாரணை

நாகர்கோவிலில் பள்ளி விடுதியில் தங்கி படித்த 4 மாணவர்கள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் மாயம்
மாணவர்கள் மாயம்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே பெரியவிளையைச் சேர்ந்த அஜித்(வயது15), கூத்தங்குழியைச் சேர்ந்த ராட்சி கர்சிங்(15), தக்கலையைச் சேர்ந்த அஜய்(17), ஆகாஷ்ராசன்(17) ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் தங்கி படித்து வருகிறார்கள்.

அஜித், ராட்சிகர்சிங் இருவரும் 10-ம் வகுப்பும், ஆகாஷ்ராசன், அஜய் இருவரும் 11-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

நேற்று காலை வழக்கம் போல் 4 பேரும் விடுதியில் இருந்து பள்ளிக்குச் சென்றனர். மாலையில் அவர்கள் விடுதிக்கு திரும்பவில்லை. இதையடுத்து விடுதி காப்பாளர் மாணவர்கள் 4 பேரையும் தேடினார். பல்வேறு இடங்களில் தேடியும் மாணவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் நேசமணிநகர் போலீசில் விடுதி காப்பாளர் ஆரோக்கிய அருள்தாஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 4 மாணவரையும் தேடி வருகிறார்கள்.

மாயமான 4 மாணவர்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் நேற்று இரவு வரை அவர்கள் வீட்டிற்குச் செல்லவில்லை.

4 மாணவர்களும் சேர்ந்து தான் விடுதியில் இருந்து வெளியேறி உள்ளனர். அவர்கள் வெளியே செல்வதற்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

மாயமாகி உள்ள மாணவர்கள் படித்து வரும் பள்ளியில் தான் நேற்று முன்தினம் ஆசிரியர் ஒருவர் அடித்ததாக மாணவர் ஒருவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சினையின் காரணமாக மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியே சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com