

கொல்லிமலை:
திருச்சி தென்னூரை சேர்ந்தவர் சண்முகநாதன் என்கிற ஷானு (வயது 47).
இவர், தனது மனைவி மகாலட்சுமி(38), மகன் நரேந்திரன்(11), மகள் யாழினி(13) ஆகியோருடன் ஒரு சொகுசு காரில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றார்.
பின்னர் கொல்லிமலையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு, அங்குள்ள மாசிலா அருவியில் குளித்து விட்டு குடும்பத்துடன் அவர் அதே காரில் ஊருக்கு திரும்பினார்.
கார் கொல்லிமலை அருகே எடப்புளி நாடு கொண்டை ஊசி வளைவில் ஓட்டி சென்றபோது எதிரே வந்த மற்றொரு சொகுசு கார் திடீரென வேகமாக மோதியது. இது தொடர்பாக சண்முகநாதனும், மோதிய மற்றொரு காரில் இருந்த அரியூர் நாடு பகுதியை சேர்ந்த தனபால்(43), பாலசுப்பிரமணி (38), புரணிகாடு பகுதியை சேர்ந்த குணசேகரன் (23), சோழக்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (31) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அவர்கள் 4 பேரும் சண்முகநாதனிடம் விபத்தை ஏற்படுத்தியது நீங்கள் தான் என கூறி ரூ.20 ஆயிரம் பணம் கேட்டனர். பணம் தர முடியாது என சண்முகநாதன் தெரிவித்தார். இதனால் 4 பேரும் சேர்ந்து அவரை மிரட்டியதாக தெரிகிறது.
இது குறித்து சண்முகநாதன் வாழவந்தி நாடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், கொல்லி மலைக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் இதேபோல் காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயற்சிப்பதும், பணம் கொடுக்கவில்லை என்றால் சுற்றுலா பயணிகளை மிரட்டுவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரும் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.