

சென்னை:
சென்னை பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருபவர் கார்த்திகேயன். இவர் கடந்த 13-ந் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். வள்ளுவர்கோட்டம் பாலம் அருகே காரில் வந்த 4 வாலிபர்கள் அங்கு நின்ற திருநங்கைகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை கவனித்த போலீஸ்காரர் கார்த்திகேயன் 4 வாலிபர்களையும் அங்கிருந்து புறப்படுமாறு கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த 4 வாலிபர்களும் போலீஸ்கார் கார்த்திகேயனை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயனுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீஸ்காரரை வாலிபர்கள் தாக்கும் வீடியோ காட்சி வைரலாக பரவியது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சுலைமான், ரிஸ்வான், ராயபுரத்தை சேர்ந்த முகமது அக்பர், முகமது நவூஷத் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே கைதான 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து சுலைமான் உள்பட 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.