காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டுறவு அதிகாரியை கொல்ல முயன்ற 4 பேர் கைது

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஓய்வு பெற்ற கூட்டுறவு அதிகாரியை கொல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஏ.பி.பி. நகரைச் சேர்ந்தவர் டேனியல் (வயது 61). இவர் கூட்டுறவு துணைப்பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகளை தங்கச்சியம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சுரேஷ்குமார் (27) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இதனை டேனியல் கண்டித்துள்ளார். இதனால் சுரேஷ்குமார் தனது காதலுக்கு இடையூறு செய்யும் டேனியல் மீது ஆத்ததிரத்தில் இருந்தார். நேற்று டேனியல் திண்டுக்கல்லுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். அவரை பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்த சுரேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் திடீரென அந்த கார் மீது மோதுவது போல் வந்தனர்.

டேனியல் கீழே இறங்கி பார்த்த போது ஒருவர் கத்தியால் குத்த முயன்றார். இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடிக்க முயன்றனர். இதனால் அவர் பழனிக்கு பாத யாத்திரை சென்று கொண்டு இருந்த கூட்டத்தில் புகுந்து கொண்டார்.

காரில் இருந்த மற்ற 3 பேரும் டேனியலை தாக்கி அவரை காருக்குள் தள்ளினர். உடனே பொதுமக்கள் ஒன்று கூடி அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது குறித்து ஒட்டன் சத்திரம் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் சுரேஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து டேனியலை கொலை செய்யும் நோக்கில் வந்தனர் என தெரிய வந்தது.

இதனையடுத்து சுரேஷ்குமார், ஆடலூர் சோலைக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்ட பிரகாஷ் (27), தங்கச்சியம்மாபட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் அருண்குமார் (20), ஆறுமுகம் மகன் விஜய் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com