முழு அரசு மரியாதையுடன் அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடல் அடக்கம் செய்யப்பட்டது

அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடல் டெக்சாஸ் நகரில் முழு அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. #RIPBush #Bushlaidtorest
முழு அரசு மரியாதையுடன் அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடல் அடக்கம் செய்யப்பட்டது
Published on

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை அந்நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.

நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டும், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை  தனது 94-வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தில் மரணம் அடைந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த புஷ் உடலை டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அரசு மரியாதையுடன் கொண்டு வருவதற்காக அதிபர்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு விமானத்தை டொனால்ட் டிரம்ப் அனுப்பி வைத்தார்.

பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் இந்த சிறப்பு விமானத்துக்கு ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்று பெயர்.  புஷ் உடலை கொண்டு வரும் நோக்கத்துக்காக அனுப்பப்பட்டதால் இவ்விமானத்துக்கு ‘41-வது சிறப்பு நோக்கம்’ (Special Air Mission 41) என தற்காலிக பெயர் சூட்டப்பட்டது.

அந்த விமானத்தில் புஷ் உடல் வாஷிங்டன் நகரை வந்தடைந்தது. விமான நிலையத்தில் முப்படை அணிவகுப்புடன் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து கேபிடோல் ஹில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசு மாளிகைக்கு புஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது.

மேலும், முன்னாள் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புஷ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இங்குள்ள தேசிய தலைமை கிறிஸ்தவ தேவாலயத்தில் அரசின் சார்பில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர், வாஷிங்டனில் இருந்து நேற்று டெக்சாஸ் மாநிலத்துக்கு புஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com