

திருவள்ளூர்:
கொரோனா பரவலை தடுக்க மதுக்கடைகள் அடைக்கப் பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பல இடங்களில் கள்ளச்சாரயம் விற்பனை தலைதூக்கத்தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் அருகே முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் வீட்டிலேயே குக்கரில் சாராயம் காய்ச்சி போலீசில் சிக்கி உள்ளார். இதுபற்றிய விபரம் வருமாறு-
திருவள்ளூர் அருகே உள்ள ராமதண்டலம் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத்துக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் சத்யவாணி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவா சன் மற்றும் போலீசார் ராமதண்டலம் பகுதியில் இன்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆரோன் என்பவரது வீட்டு மாடியில் குக்கரில் சாராயம் காய்ச்சுவது தெரிந்தது. இதற்காக மாடியில் தனியாக டேபிள், கியாஸ்சிலிண்டர், பெரிய குக்கர், டியூப் உள்ளிட்டவை இருந்தன.
இதையடுத்து ஆரோனை போலீசார் கைது செய்தனர். சாராயம் காய்ச்ச பயன்படுத்திய குக்கர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 50 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.
குக்கரில் சாராயம் காய்ச்சிய முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.