மேல்சபை எம்.பி. பதவி - மன்மோகன்சிங் போட்டியின்றி தேர்வு

மன்மோகன் சிங்கை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என ராஜஸ்தான் மாநில பா.ஜனதா தெரிவித்துள்ள நிலையில், அவர் மேல்சபை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
Published on

ஜெய்ப்பூர்:

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் கடந்த 1991-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதில் இருந்து தொடர்ந்து 28 ஆண்டுகளாக அவர் அசாமில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார். அவரது எம்.பி. பதவிக்காலம் கடந்த ஜூன் 14-ந் தேதி முடிவடைந்தது.

அவரை மீண்டும் தேர்வு செய்யும் அளவுக்கு அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ. பலம் இல்லை. எனவே அவர் வேறு மாநிலங்களில் இருந்து மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேறு மாநிலங்களிலும் காலியிடம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ராஜஸ்தான் மாநில பா.ஜனதா தலைவர் மதன்லால் சைனி சமீபத்தில் காலமானார். அதனால் காலியான இடத்துக்கு வருகிற 26-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மொத்தம் 200 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் சுயேட்சைகள், பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் ஆதரவும் காங்கிரசுக்கு இருப்பதால் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு தேவையான பலம் உள்ளது. இதையடுத்து ராஜஸ்தானில் இருந்து மன்மோகன்சிங்கை போட்டியிட செய்து மேல்சபை எம்.பி. ஆக்க காங்கிரஸ் முடிவு செய்தது.

அதன்படி மன்மோகன்சிங் கடந்த 13-ந் தேதி ஜெய்ப்பூரில் மனுதாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என அம்மாநில பா.ஜனதா தெரிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில பா.ஜனதா தலைவர் குலாம்சந்த் கடாரியா கூறுகையில், “எங்களுக்கு போதுமான உறுப்பினர்கள் இல்லாததால் வேட்பாளரை நிறுத்தவில்லை” என்றார். எனவே மன்மோகன்சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com