

கோகிமா:
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 2013–ம் ஆண்டு முதல் நாகாலாந்து மக்கள் முன்னணியின் ஆட்சி நடந்து வருகிறது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முதல்–மந்திரியாக இருந்த ஜெலியாங் பதவி விலகினார். முதல் மந்திரியாக ஷர்கோசெலி லெய்சீட்சு கடந்த பிப்ரவரி மாதம் பதவியேற்றார்.
அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படவேண்டும் என்பதற்காக, 10 வடக்கு அங்காமி-1 தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த அவரது மகன் கிரியு லெய்சீட்சு கடந்த மே மாதம் 24-ம் தேதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து காலியாக இருந்த அந்த தொகுதியில் கடந்த மாதம் 29-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் நாகாலாந்து மக்கள் முன்னணி சார்பில் ஷர்கோசெலி லெய்சீட்சு போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஒரு சுயேட்சை வேட்பாளர் போட்டியிட்டார். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை முடிவில் லெய்சீட்சு 8026 வாக்குகள் பெற்றார். சுயேட்சை வேட்பாளர் கெக்ரீ யோமே 4558 வாக்குகள் பெற்றார். மொத்தம் பதிவான 23 தபால் ஓட்டுக்களில் லெய்சீட்சு 12 வாக்குகளும், யோமே 10 வாக்குகளும் பெற்றனர். ஒரு ஓட்டு நிராகரிக்கப்பட்டது. இதனால் 3470 வாக்குகள் வித்தியாசத்தில் லெய்சீட்சு வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, ஆளுங்கட்சியில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் போர்க்கொடி உயர்த்திய ஜெலியாங், லெய்சீட்சுவை வெளியேற்றிவிட்டு, கடந்த மாதம் 19-ம் தேதி மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.