தனியார் பால் நிறுவனங்களிடம் பணம் வாங்கி கொண்டு பேசுகிறார் வைகைச்செல்வன்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தனியார் பால் நிறுவனங்களிடம் பணம் வாங்கி கொண்டு, தனக்கு எதிராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசுகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டி உள்ளார்.
தனியார் பால் நிறுவனங்களிடம் பணம் வாங்கி கொண்டு பேசுகிறார் வைகைச்செல்வன்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Published on

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சில நாட்களுக்கு முன்னர், தனியார் பால் நிறுவனங்கள் மீது சர மாரியான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

தனியார் தயாரிக்கும் பாலில் பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்படுவதாகவும், அதனை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக தனியார் பால் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இது தொடர்பான அறிக்கையை சுகாதார துறை வெளியிட்டுள்ளது. அதில் கலப்பட பால் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை. என்றும், தனியார் பாலில் தரம் மட்டுமே கொஞ்சம் குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கலப்பட பால் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பால் முகவர்கள் சங்கம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், இல்லையென்றால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கலப்பட பால் விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், முன்னாள் அமைச்சர் வைகைசெல்வனுக்கும் மோதல் வெடித்துள்ளது.

கலப்பட பால் விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டும் என்று வைகை செல்வன் பேட்டி அளித்ததாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜேந்திர பாலாஜி, வைகைசெல்வனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி வருமாறு:-

தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக நான் தெரிவித்து இருந்தேன். பால் முகவர்கள் கலப்படம் செய்யவில்லை என்று நிரூபித்தால் ராஜினாமா செய்வேன் என்றும் கூறினேன். ஆனால் இதுவரை அவர்கள் நிரூபிக்கவில்லை. கலப்படம் குறித்து உறுதி செய்வதற்காக நாங்கள்தான் ஒவ்வொரு லேப்பாக சென்று ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம்.

கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் தூண்டிவிடுவதால் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுச்சாமி எனக்கு எதிராக பேசி வருகிறார்.

தற்போது முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தனியார் பால் நிறுவனங்களிடம் பணம் வாங்கி கொண்டு எனக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

வைகை செல்வன் அருப்புக்கோட்டை சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களை ஏமாற்றிதான் வெற்றி பெற்றார். 3 ஆயிரம் மதிப்பிலான டோக்கன் கொடுத்து தான் ஓட்டு வாங்கினார். பார் நடத்தும் அப்பாவி தொழிலாளர்களிடம் மாதம் ரூ.20 ஆயிரம் பணம் வாங்கினார்.

அனைத்து வேலைகளுக்கும் பணம் வாங்கிதான் செய்து கொடுத்தார். அவர் ஒரு 500 ரூபாய் பேச்சாளர்.

பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் கூறி உள்ளேன். நாங்களும் சுகாதாரத்துறையும் சேர்ந்து சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்க தயாராகி வருகின்றோம்.

பால் மாதிரிகளை சம்பந்தப்பட்ட ஆய்வு கூடங்களுக்கு நாங்கள் அனுப்பி வைத்தால், எங்கள் பால் சென்று சேர்வதற்குள் சம்பந்தப்பட்ட பால் நிறுவன பிரதிநிதிகள் ஆய்வு கூடத்திற்கு சென்று விடுகின்றனர். இதனால் பால் கலப்பட சோத னையில் பெரும் சவாலை சந்தித்து வருகிறோம்.

சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்கள் அரசியல் வாதிகள் மூலம் எனக்கு எதிராக பேட்டி கொடுக்க வைக்கின்றனர். தற்போது பால் ஆய்வுகளை ரகசியமாக மேற்கொண்டு வரு கின்றோம். பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் இனி தப்பிக்கவே முடியாது என்ற அளவில் எங்களது நடவடிக்கை இருக்கும்.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.

ராஜேந்திர பாலாஜியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு வைகை செல்வன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

பால் கலப்படம் தொடர்பாக நான் அளித்த பேட்டியை சரியாக உள் வாங்கி கொள்ளாமல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரம் தாழ்ந்து பேசி உள்ளார். என் மீது சேற்றை வாரி வீசுவதாக நினைத்து, அவர் தன் மீதே சேற்றை வாரி பூசிக் கொண்டுள்ளார்.

எந்த விதை போடுகிறோமோ, அதுவே பழமாக கிடைக்கும். வேப்பம் பழ விதையை போட்டுவிட்டு பலாப்பழத்தை எதிர்பார்க்கலாமா? அந்த வகையில் சொல் எதுவோ, அதுவே வாழ்க்கையாக அமையும். ராஜேந்திர பாலாஜியின் பேச்சு இதனையே காட்டுகிறது.

இதுபோன்ற பேச்சுக்கள் அவரது பிறவிக்குணமாகும். அதனை மாற்ற முடியாது. விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளை தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்த மிகச் சிறந்த அ.தி. மு.க. மாவட்ட செயலாளர் அவர்.

கட்சியில் தன்னைத் தவிர யாரும் வளர்ந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக செயல்படுபவர். மற்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்கிற குணம் கொண்டவர். எனது தோல்விக்கு அவரே காரணம்.

அரசியல் பிழைப்புக்காக ராஜேந்திரபாலாஜி எதை வேண்டுமானாலும் செய்வார். அவரது குற்றச்சாட்டுக்கு இந்த பதிலே போதுமானதாகும். மறப்போம். மன்னிப்போம்.

இவ்வாறு வைகைச் செல்வன் கூறினார்.

அ.தி.மு.க.வில் ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், ராஜேந்திர பாலாஜி - வைகை செல்வன் மோதல் புதிய புயலை கிளப்பி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com