

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இதனை உள்ளபடியே நாங்கள் வரவேற்கிறோம். ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும் முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து அப்பழுக்கில்லாத உண்மையை நிலை நாட்டி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரணை தான் வேண்டும். சி.பி.ஐ. விசாரணையைத்தான் நாங்கள் கோரியிருந்தோம். விசாரணை கமிஷனில் முழுமையான நீதி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பை பொறுத்தவரை சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து முழுமையாக விலக்கி வைக்க வேண்டும். இதற்கு தேர்தல் ஆணையத்தில் அவர்கள் கொடுத்துள்ள பிரமாணப் பத்திரத்தை வாபஸ் பெற்றாலே போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.