

கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது கம்பம் மெட்டு. இது தமிழக- கேரள எல்லைப்பகுதியாகவும் உள்ளது. இப்பகுதியில் கேரளா செக்ஸ்போஸ்ட் அமைப்பது போன்ற அத்துமீறல்களில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் மெட்டுப்பகுதியில் கேரள வனத்துறையினர் கண்டெய்னரை வைத்து சென்றனர். தமிழக பகுதியில் வைக்கப்பட்டிருந்த அந்த கண்டெய்னரை அகற்றுமாறு தமிழக வனத்துறையினர் தெரிவித்ததால் அது அங்கிருந்து அகற்றப்பட்டது.
சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு? என்பதை அறிய இருமாநில எல்லைப் பகுதியை குறிக்கும் வகையில் நில அளவை கற்கள் ஊன்றுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 7-ந் தேதி இரு மாநில அதிகாரிகளும் கூட்டாக இணைந்து எல்லைப் பகுதியில் நிலஅளவை பணியை மேற்கொண்டனர். அதன்பின் 12-ந் தேதி நவீன முறையில் நில அளவை கற்கள் ஊன்றப்பட்டது.
மந்திப்பாறை, நாவல் பள்ளம் இடத்தில் தொடங்கி கல்லுவேலி எஸ்டேட் வரை எல்லையை நிர்ணயம் செய்து 14 நில அளவை கற்கள் ஊன்றப்பட்டன. ஆனால் அதன்பிறகு இப்பணிக்கு கேரள அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மேலும் 2 நாட்கள் கழித்து ஊன்றப்பட்ட நில அளவை கற்களை சிலர் பிடுங்கி அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மீண்டும் நில அளவை பணி நடைபெறாமல் உள்ள நிலையில் கம்பம் மெட்டு பகுதியில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தனது கட்சியினருடன் ஆய்வு செய்தார். அப்போது நில அளவை கற்கள் ஊன்றப்பட்ட இடத்தை அவர் பார்வையிட்டார்.
ஏற்கனவே கடந்த வாரம் இப்பகுதியில் இடுக்கி எம்.பி. ஜோய்ஸ் ஜார்ஜ் பார்வையிட்டார். அப்போது அவர் கேரளா ஆக்கிரமித்த பகுதியை செல்போனில் படம் பிடித்தார். அவரை தமிழக அதிகாரிகள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது உம்மன் சாண்டியும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆய்வு செய்து சென்றுள்ளதால் இரு மாநில எல்லை பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.