முன்னாள் மேயர் கொலையில் கைது செய்யப்பட்ட சீனியம்மாள்-கணவர் பரபரப்பு வாக்குமூலம்

கூலிப்படை மூலம் கொலை செய்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் மகனை வைத்து உமா மகேஸ்வரியை தீர்த்து கட்டியதாக முன்னாள் மேயர் கொலையில் கைது செய்யப்பட்ட சீனியம்மாள் மற்றும் அவரது கணவர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சீனியம்மாள் மற்றும் அவரது கணவர் சன்னாசியை விசாரணைக்கு பின் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்ற காட்சி.
சீனியம்மாள் மற்றும் அவரது கணவர் சன்னாசியை விசாரணைக்கு பின் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்ற காட்சி.
Published on

நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்தவர் உமா மகேசுவரி (வயது 62). இவர் தி.மு.க.வை சேர்ந்தவர். இவருடைய கணவர் முருகசங்கரன் (72). இவர்களின் வீடு பாளையங்கோட்டை அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே ரோஸ்நகரில் உள்ளது. உமா மகேசுவரியின் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த மாரி (37) என்பவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி மாரி வேலைக்காக உமா மகேசுவரி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு உமா மகேசுவரி, முருகசங்கரன் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வர முயன்றார்.

அப்போது வீட்டில் மறைந்து இருந்த மர்மநபர் மாரியையும் கொலை செய்தார். உமாமகேசுவரி அணிந்து இருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கருதப்பட்டது. இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இந்த கொலையில் தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் (34) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது. பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள தனது வீட்டில் பதுங்கி இருந்த கார்த்திகேயனை கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு அணில்குமாரிடம் கொலை வழக்கு குறித்த ஆவணங்களை மேலப்பாளையம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த கார்த்திகேயனை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதாவது, கடந்த 2009-ம் ஆண்டு பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பெட்டிக்கடையை கார்த்திகேயன், அவரது தந்தை சன்னாசி ஆகியோர் சேர்ந்து தீவைத்து கொளுத்தி உள்ளார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் 2 பேரையும் போலீசார் கைது செய்து பாளை ஜெயிலில் அடைத்தனர்.

அப்போது அவர்களுக்கு அங்கு இருந்த கூலிப்படையைச் சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் விடுதலையாகி வெளியே வந்தனர். தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்தவரை அழைத்து சீனியம்மாள், சன்னாசி, கார்த்திகேயன் ஆகியோர் பேசியுள்ளனர்.

அப்போது உமாமகேசுவரி உயிருடன் இருந்தால் தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காது. எனவே அவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் பாளையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

உமாமகேசுவரி உயிருடன் இருந்தால் அரசியலில் நாங்கள் வளர முடியாது. அதற்கு அவர்தடையாக இருப்பார் என கருதினோம். மேலும் தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காது. எனவே உமாமகேசுவரியை கூலிப்படையை ஏவி கொலை செய்ய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினோம்.

ஆனால் கூலிப்படையை ஏவி கொலை செய்தால் நாங்கள் போலீசில் சிக்கி கொள்வோம் என எண்ணிய நாங்கள் எங்கள் மகன் கார்த்திகேயன் மூலம் அவரை கொலை செய்ய எண்ணினோம்.

அதன்படி வீட்டில் இருந்த உமா மகேசுவரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பனிப்பெண் மாரியை கார்த்திகேயன் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். ஆனால் போலீசார் அவரை பிடித்துவிட்டனர். மேலும் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி எங்களையும் கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com