ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதான பீகார் முன்னாள் பெண் மந்திரி ஜாமினில் விடுதலை

முசாபர்பூர் சிறுமிகள் காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை தொடர்பாக நடந்த சோதனையில் ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதான பீகார் முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா இன்று ஜாமினில் விடுதலையானார். #ManjuVerma #ManjuVermabail
ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதான பீகார் முன்னாள் பெண் மந்திரி ஜாமினில் விடுதலை
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், சிறுமிகள் இல்லத்தின் நிர்வாகியுமான பிரஜேஷ் தாக்குர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இவர், இந்த பாலியல் புகாரால் மந்திரி பதவியை இழந்த மஞ்சு வர்மாவின் கணவரான சந்திரசேகர் வர்மாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

இதனால், சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் மஞ்சு வர்மாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது.

சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் இந்த வழக்கில் சந்திரசேகர் வர்மா கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இந்தநிலையில் அவருடைய மனைவி மஞ்சு வர்மா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று பீகார் மாநில போலீசாருக்கு கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் பெகுசராய் நகர கோர்ட்டு மஞ்சு வர்மாவின் சொத்துகளை முடக்கியது.

சுப்ரீம் கோர்ட்டின் கெடுபிடியால் கலக்கமடைந்த பீகார் போலீசார் மஞ்சு வர்மாவை கைது செய்ய வாரண்ட் வழங்குமாறு உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதைதொடர்ந்து கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மஞ்சு சர்மாவை போலீசார் தேடி வந்தனர்.

சுமார் 3 மாதங்களாக போலீசார் கண்ணில் சிக்காமல் இருந்த மஞ்சு வர்மா, கடந்த 20-11-2018 அன்று பேகுசராய் மாவட்டத்தில் உள்ள மஞ்ஹவுல் நீதிமன்றத்தில் ஆஜரானார். சுமார் 4 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மஞ்சு வர்மாவை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இதே கோரிக்கையுடன் பாட்னா ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மஞ்சு வர்மாவை ஜாமினில் விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். #FormerBiharMinister #ManjuVerma #ManjuVermabail #PatnaHighCourt 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com