கொடைக்கானல் ஏரியில் மீன் பிடித்த விவகாரம்- நடிகர்களுக்கு உதவிய வனக்காவலர்கள் சஸ்பெண்ட்

கொடைக்கானலில் பேரிஜம் ஏரியில் நடிகர்கள் விமல், சூரி மீன் பிடிக்க உதவிய வனக்காவலர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர்கள் விமல்-சூரி
நடிகர்கள் விமல்-சூரி
Published on

கொடைக்கானல்:

நடிகர்கள் விமல், சூரியுடன் 2 இயக்குனர்கள் கடந்த 17-ந்தேதி கொடைக்கானல் வந்துள்ளனர். இங்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரிக்கு வனத்துறையிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்றுதான் செல்லவேண்டும். ஆனால் இவர்கள் அனுமதி பெறாமல் ஏரிக்கு சென்று மீன்பிடித்து உள்ளனர்.

இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியானது. இதையடுத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் போலீசில் புகார் அளித்ததுடன் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி தேஜஸ்வி கூறியதாவது:-

வனத்துறை அதிகாரிகள் இல்லாத நிலையில் சில ஊழியர்கள் உதவியுடன் நடிகர்கள் விமல், சூரி உள்பட சிலர் பேரிஜம் ஏரிக்கு அனுமதி இன்றி சென்றுள்ளனர். இது குறித்து தற்போது தான் தகவல் வந்துள்ளது. தடை விதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற இவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. மோயர்பாயிண்ட் என்ற இடத்தில் உள்ள இரும்பு கேட்டை திறந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டும். ஆனால் அந்த கேட்டை திறந்து விட்டு அவர்களுடன் சென்ற வன ஊழியர்கள் யார்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே நடிகர்கள் விமல், சூரி தரப்பினர் இ-பாஸ் பெற்றுதான் கொடைக்கானலுக்கு வந்தார்களா? அல்லது இ-பாஸ் இல்லாமல் வந்தார்களா? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகளும், பல்வேறு துறை அதிகாரிகளும் விசாரித்தனர்.

இந்த நிலையில் நடிகர்கள் விமல், சூரி ஊரடங்கின் போது ஏரியில் மீன்பிடிக்க உதவிய வனக்காவலர்கள் பிரபு, செல்வம் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் தடை செய்யப்பட்ட அடர் வனப்பகுதிக்கு எப்படி சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com