

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற யோகி ஆதித்யாநாத், தனது அமைச்சரவையின் முதல் பட்ஜெட்டை கடந்த ஜூலை மாதத்தில் தாக்கல் செய்தார்.
முன்னதாக சட்டசபையில் பாதுகாவலர்கள் சோதனை நடத்தியபோது, எதிர்க்கட்சி தலைவர் ராம்கோவிந்த் சவுத்ரி இருக்கை அருகில் வெள்ளை நிற பவுடர் கொண்ட ஒரு பிளாஸ்டிக் கவர் காணப்பட்டது. அதனை கைப்பற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படும் மிக ஆபத்தான மூலப்பொருள் என
அறிக்கை அளித்தனர்.
இதுதொடர்பாக, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சட்டசபையில் வெடிமருந்து கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக ஆராயும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், உ.பி. மாநில உள்துறை முதன்மை செயலாளர் அரவிந்த் குமார் கூறுகையில், சட்டசபையில் கண்டெடுக்கப்பட்டது வெடிமருந்து என தவறான அறிக்கை அளித்த தடயவியல் துறை இயக்குனர் ஷிவ் பிஹாரி உபாத்யாய சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.