என்ஜிஓ தொடர்பான வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

என்ஜிஓக்களின் செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
மாநிலங்களவை
மாநிலங்களவை
Published on

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தொடர்பான, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (எப்சிஆர்ஏ) மக்களவையில் கடந்த 21ம் தேதி நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விவாதத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய், ‘வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவானது, தேசிய மற்றும் உள்நாட்டின் பாதுகாப்பிற்கானது. இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் வெளிநாட்டு நிதிகள் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம். பல நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க முயற்சித்து, அதில் வெற்றி பெற்றதையும் பார்க்க முடிந்தது.  இதற்குக் காரணம், அவர்களின் அடையாளம் முழுமையாக வெளிப்படாததால், அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. எனவே அவர்களின் அடையாளத்தை வெளிக்கொண்டு வருவதற்கே ஆதார் அட்டை கொண்டு வரப்பட்டுள்ளது’ என்றார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெறும் நிதி உண்மையில் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை சரிபார்க்க இந்த மசோதா வகை செய்வதாக பாஜக எம்.பி. அருண் சிங் தெரிவித்தார்.

பிஜு ஜனதா தளம் எம்பி பிரசாந்தா நந்தாவும் இந்த மசோதாவை ஆதரித்து பேசினார். அதேசமயம், நேர்மையான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அதிகாரிகள் தேவையற்ற தொல்லைகள் கொடுக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உரிய முறையில் பதிவு செய்து கொண்டு, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி அல்லது பங்களிப்பிற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவதே எப்சிஆர்ஏ ஆகும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களுடைய எப்சிஆர்ஏ சான்றிதழை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதையடுத்து சட்டத்தை மீறாத வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் செயல்படுகிறதா என்று மத்திய அரசு ஆய்வு செய்யும். இதில் எந்தவித பிரச்சினையும் இல்லையெனில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com