

பெரம்பலூர்:
பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலம் அருகே அரியலூர் மெயின் ரோட்டில் எம்.எஸ்.ஆர். ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலின் சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து நுகர்வோரிடமிருந்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் சென்றன. அதன் பேரில் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சவுமியா மற்றும் சின்னமுத்து உள்பட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஓட்டலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஓட்டலின் உணவு தயாரிக்கும் இடத்தில் இருந்து குப்பைகள் முறைப்படி அப்புறப்படுத்த படுகிறதா? இறைச்சி, மீன் உள்ளிட்டவை பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டு அது கெட்டுப்போகாமல் இருக்கிறதா? உணவு வணிகர்களுக்கான உரிமம் பெற்று இந்த ஓட்டல் இயங்குகிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சோதனை செய்தனர்.
அப்போது குளிர்சாதன பெட்டியில், “பிரைடு ரைஸ்” தயாரிப்பதற்கான மூலப்பொருள் பாலித்தீன் பையில் அடைக்கப்பட்டு கெட்டுப்போன நிலையில் இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அந்த பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பரோட்டா தயாரிப்பதற்கான மைதா மாவு மூட்டைகளில் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் இருக்கின்றனவா? எனவும் சோதித்தனர்.
மாவு பாக்கெட்டுகள், ரவை, டீத்தூள் பாக்கெட்டுகள், கடலை எண்ணை பாக்கெட்டுகளில் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய லேபிள் ஒட்டப்படாததால் அதனையும் பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு ரூ.5 ஆயிரம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஓட்டலின் உணவு தயாரிப்பு பொருட்கள், சுகாதாரம் உள்ளிட்டவற்றை பராமரிக்க ஒரு குழுவினரை நியமித்து உணவு பாதுகாப்பு விதிகளின் கீழ் ஓட்டலை இயக்குமாறு கூறியிருக்கிறோம். இனியும் புகார் வந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நுகர்வோர்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண் அடங்கிய வில்லை ஓட்டல் அறையில் ஒட்டப்பட்டுள்ளது என அதிகாரி சவுமியா நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி அன்பழகன் உடனிருந்தார். #tamilnews