மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலுவின் தண்டனை விபரம் நாளை வீடியோ கான்பிரன்சிங் மூலம் அறிவிப்பு

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கான தண்டனை விபரத்தை நாளை பிற்பகல் 2 மணிக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. #FodderScamVerdict #LaluPrasadYadav #tamilnews
மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலுவின் தண்டனை விபரம் நாளை வீடியோ கான்பிரன்சிங் மூலம் அறிவிப்பு
Published on

ராஞ்சி:

பீகார் மாநில அரசியலை உலுக்கிய மாட்டுத் தீவன ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன.

இவ்வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் தவிர பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் மீது குற்றம் சாட்டப்பட்டு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதில், சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து பணத்தை முறைகேடாக எடுத்த வழக்கில் 2013ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. லாலு, ஜெகனாத் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ. 25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் சிறையில் அடைக்கப்பட்ட லாலு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதேபோல், தியோஹர் மாவட்ட கருவூலத்தில் இருந்து ரூ.84.5 லட்சத்தை முறைகேடாக எடுத்த வழக்கின் விசாரணையும் தனியாக நடந்தது. இதில், லாலு பிரசாத், ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 34 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். விசாரணைக் காலத்தின்போது 11 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் அப்ரூவர் ஆகிவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி நீதிபதி சிவபால் சிங் தீர்ப்பளித்தார்.  பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா உட்பட 6 பேர் விடுவிக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கான தண்டனை விபரங்கள் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

ஆனால், சமீபத்தில் மரணம் அடைந்த இரண்டு வழக்கறிஞர்களுக்கு நேற்று இரங்கல் தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. எனவே, தண்டனை விவரம் ஜனவரி 4-ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

அதன்படி ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் நேற்று தண்டனை விவரங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக லாலு பிரசாத், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இதனால் தண்டனை விவரத்தை உடனே வெளியிடுவார் என அனைவரும் காத்திருந்தனர். ஆனால், தண்டனை அறிவிப்பை நாளைக்கு (இன்று வெள்ளிக்கிழமை) ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.  

இந்நிலையில், லாலுவுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனை விபரம் தொடர்பாக இன்று அரசுதரப்பு வக்கீலும் லாலுவின் வக்கீலும் இன்று நீதிபதியின் முன்னர் வாதிட்டனர்.  அப்போது சிறையில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணையில் ஆஜரானார்.

இந்த வாதம் இன்று மாலை முடிவடைந்த நிலையில் லாலு பிரசாத் யாதவுக்கான தண்டனை விபரத்தை நாளை பிற்பகல் 2 மணிக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. லாலு பிரசாத் யாதவ் உள்பட இவ்வழக்கில் தொடர்புடைய குற்றாவாளிகளுக்கான தண்டனை விபரம் நாளை பிற்பகல் 2 மணியளவில் வீடியோ கான்பிரன்சிங் முறையில் அறிவிக்கப்படும் என லாலுவின் வழக்கறிஞர் சித்ரஞ்சன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

#FodderScamVerdict #LaluPrasadYadav #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com