கோரிமேட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு

கோரிமேட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள செயினை மர்ம நபர் பறித்து சென்று விட்டார்.
செயின் பறிப்பு
செயின் பறிப்பு
Published on

புதுச்சேரி:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி செந்தாமரை (வயது 60). இவர் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் கலைவாணி கோரிமேடு போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் போலீஸ்காரர் செல்வம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து இருந்தார். 

இந்த நிலையில் கலைவாணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பார்ப்பதற்காக செந்தாமரை மகள் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று காலை ஊர் திரும்புவதற்காக கோரிமேடு பஸ் நிலையத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி பழுது பார்ப்பது போல் கீழே குனிந்து கொண்டிருந்தார். 

அந்த நேரத்தில் செந்தாமரை நடந்து வந்த போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் செயினை அந்த மர்ம நபர் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். இதன் மொத்த மதிப்பு ரூ.1 1/2 லட்ச மாகும். செயினை பறிகொடுத்த செந்தாமரை இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திரு முருகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். 

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து  செயினை பறித்து சென்ற மர்ம நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள கோரிமேடு பஸ் நிலைய பகுதியில் மூதாட்டியிடம் துணிகரமாக செயினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com