வட மாநிலங்களில் வெள்ளம்: வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

குஜராத், பீகார் உள்பட வட மாநிலங்களில் மழை வெள்ளம் காரணமாக வெங்காய விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காயம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
வட மாநிலங்களில் வெள்ளம்: வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு
Published on

சென்னை:

சென்னையில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்துதான் மற்ற மாநிலங்களுக்கு வெங்காயம் அதிக அளவில் அனுப்பப்படுகிறது. அதுவும் ‘நாசிக்‘ பகுதியில் தான் அதிக அளவு வெங்காய விளைச்சல் நடைபெறுகிறது.

தற்போது குஜராத், பீகார் உள்பட வட மாநிலங்களில் மழை வெள்ளம் காரணமாக வெங்காய விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவு வெங்காயம் அனுப்பப்படுகிறது.

இதனால் பல மாநிலங்களில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் 1 கிலோ வெங்காயம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்பட்டது. ஆனால் இப்போது 40 ரூபாய்க்கு விலை உயர்ந்து விட்டது.

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தை மொத்த விலைக்கு ரூ.28-க்கு வாங்கும் கடைக்காரர்கள் அதை மளிகை கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் ரூ.40 முதல் ரூ.45 வரை விற்கிறார்கள். இது மகாராஷ்டிரா மற்றும் பெங்களூர் வெங்காயம் ஆகும்.

சுமாரான சைசில் உள்ள ஆந்திரா வெங்காயத்தை கோயம்பேட்டில் ரூ.20-க்கு வாங்கும் வியாபாரிகள் தள்ளுவண்டி, காய்கறி மளிகை கடைகளில் 30 ரூபாய்க்கு விற்கிறார்கள். 250 கிராம் வாங்கினால் 10 ரூபாய் சொல்வார்கள்.

தென் மாவட்ட மக்கள் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் சாம்பார் வெங்காயம் 1 கிலோ ரூ.120க்கு உயர்ந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகளில் ரூ.140 வரை விற்கப்படுகிறது.

விளைச்சல் குறைந்த காரணத்தால் சின்ன வெங்காயம் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com