

ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டியை அடுத்துள்ள முக்காரம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் குமார்.
இவர் ஜே.சி.பி. சொந்தமாக வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு 5 வயதில் தர்ஷினி என்கிற மகளும், 1½ வயதில் தனஸ்ரீ உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி அன்று வீட்டின் முன்பு தர்ஷினி விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது செடிக்கு தெளிக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்து பவுடர் பாக்கெட்டுடன் கீழே கிடந்தது. அதனை தர்ஷினி சத்துமாவு என்று நினைத்து பாக்கெட்டை பிரித்து பூச்சிக்கொல்லி மருந்தை தெரியாமல் சாப்பிட்டாள். பின்னர் சிறிது நேரத்தில் அந்த சிறுமி மயக்கம் அடைந்து கீழே விழுந்தாள்.
இதனை பார்த்த தாய் பிரியா அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு இன்று அதிகாலை தர்ஷினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சிறுமியின் உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனை அங்கிருந்தவர்கள் பார்ப்போரை கண்கலங்க செய்தது.
இது குறித்து சாமல்பட்டி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து தர்ஷினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சிறுமியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.